வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்






எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய்
நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே


பொருள்:
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள் "ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே


பொருள்:
வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே. என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து, உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே ! எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே ! அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்
தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே


பொருள்:
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம் தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய், (இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய், உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய். மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே ! வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே ! சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள்
ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை


பொருள்:
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று, இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே ! ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக மறைந்திருந்தாய், எம்பெருமானே !

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,


பொருள்:
கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை மறைத்து மூடிய மாயையாகிய இருளினை செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி, மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும், அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து, மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்


பொருள்:
ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து, உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப் பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்


பொருள்:
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே ! ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே ! பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே ! இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும்
ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

பொருள்:
தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே ! ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே ! (என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே ! இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக