வியாழன், 29 ஏப்ரல், 2010

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்


சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார். சீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்சீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்
வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க


பொருள்:
நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

பொருள்:
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி


பொருள்:
எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி. ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி. அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி. மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்


பொருள்:
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள். சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்


பொருள்:

நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று, வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும், அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்


பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே





ஓம் நம சிவாய!

நம பார்வதி பத யே
ஹர ஹர மஹாதேவா!!

தென்னாடு உடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக