புதன், 1 செப்டம்பர், 2010

அன்பருக்கு அன்பனே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்


பொருள்:
அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே ! பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே ! முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும் ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே ! (காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக -
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின் பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்


பொருள்:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே ! தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று


பொருள்:
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே ! அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள் உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே ! என்னை உடைமையாக ஆள்பவனே ! பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே


பொருள்:
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள் மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே ! வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து


பொருள்:
அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே! ஓ ! என்று சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள், பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.




திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக